தன்னுள் இருப்பது தெய்வம்
வாழ்க வளமுடன்!
தன்னுள் இருப்பது தெய்வம் என்று உணரும் போது தன்னை உணர முடியும்.
அதற்காக ஒரு கதை.
ஒரு குருவிடம் பல சீடர்கள் படித்து வந்தனர். அச்சீடர்களில் ஒருவன் தான் எப்போதும் இரவில் கிருஷ்ணனுடன் விளையாடுவதாகக் கூறிக் கொண்டு இருப்பான். மற்ற சீடர்களுக்கு இவனைக் குறித்து பெருமைப் படுவர். தங்களுடன் விளையாட கடவுள் வரவில்லையே என ஏங்குவர். படிப்பிற்கு உரிய காலம் முடிந்தது.அவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனரா எனச் சோதிக்க குரு விரும்பினார்.எனவே தன் ஆசிரமம் வழியாகச் சென்ற ஒரு ஞானியரை அழைத்து வந்தார்.அந்த ஞானியர் குயவராய் இருந்தவர். மண்பானை வெந்ததா எனச் சரிபார்க்க கையில் ஒரு குச்சியை வைத்து தட்டிப்பார்ப்பார். தட்டும்போது " "ங்" என்ற சத்தம் வரும். அதைக்கொண்டு பானையைச் சோதிப்பார். ஞானியான பின்னும் கையில் அக்குச்சி வைத்து இருந்தார். குரு அழைத்தவுடன் ஞானி, சீடர்களைச் சோதிப்பதாக ஒப்புக் கொண்டார். அனைத்து சீடர்களையும் அமர வைத்து கண்ணை மூடி தவ நிலையில் இருக்க வைத்தார்.பின்னர் குச்சிக் கொண்டு மண்டையில் தட்டிப் பார்த்து முடிவு சொன்னார். ஒரு சீடனைத் தவிர அனைவரும் தேர்ச்சி பெற்றதென சொன்னார். தேர்ச்சி பெறாதவர் யார் என குரு கேட்க அவனை அடையாளம் காட்டினார். அனைத்து சீடர்களும் வியந்தனர். ஏனெனில் கிருஷ்ணனுடன் இரவில் விளையாடுவதாகச் சொன்ன சீடன் தான் அவன்.
அனைவரும் ஏன் எனக் கேட்டனர். தன்னிலிருந்து வேறொன்றாக கடவுளைப் பார்க்கும் ஒருவர் எப்படி தன்னை உணர்ந்திருக்க முடியும்? தன்னை அறிய வில்லை என்று தான் பொருள். தன்னை உணர தானும் தெய்வம் என உணர்ந்து இருந்தல் வேண்டும் என்கிறார் அந்த ஞானி.
உன்னுள் தெய்வம் உறையும்
உண்மை உணர தவமும் அறமும் அவசியம். நம்முள் உள்ள தன்முனைப்பு, மயக்கம், பாவப்பதிவுகள் களைந்தால் தெய்வமே நாமாகி வந்துள்ளதை உணர முடியும்.
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா
அசனமாப்பேட்டை தவமையம்.
Comments
Post a Comment