சுய முயற்சி
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
நன்கு கற்றறிந்த விஞ்ஞானி ஒருவர் வண்ணத்துப் பூச்சிகளை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட தனது நண்பரிடம் புழு நிலையில் உள்ள ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கொடுத்தார். இந்தப் புழு அரிய அழகான வண்ணத்துப் பூச்சியாக வளரும் என்றும், அதைத் தொந்தரவு செய்யாமல் கவனமாகக் கண்காணித்து அதனுடைய வளர்ச்சியால் பல்வேறு நிலைகளைக் கவனித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். நண்பரும் அந்தப் புழுவை நன்கு கவனித்தார்.
சில நாட்களுக்குப் பிறகு அந்தப் புழுக் கூட்டின் ஓடு மெதுவாக, மிக மெல்லியதாகி, எளிதில் வெளியே தெரியக் கூடியதாகியது. அவரால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடிந்தது.
உள்ளே இருப்பது மெதுவாக அசையத் தொடங்கியது. இது அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நகரத் தொடங்கி, அது அந்தக் கூட்டை விட்டு வெளியே வர முயற்சித்தது. வெளியே வர முட்டி மோதியது. அதை அவர் நன்கு உணர்ந்தார். அந்தக் கூட்டை உடைத்து உதவலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
இறுதியாக, அடக்க முடியாத ஆர்வம் அவரைத் தூண்டியதால் அவர் ஒரு ஊசியால் அந்த ஓட்டின் மீது துளையிட்டார். சில விநாடிகளில், அவரது விஞ்ஞானி நண்பர் விவரித்திருந்ததைப் போலவே அழகான வண்ணத்துப் பூச்சி வெளியே வந்து காற்றில் பறந்து, பிறகு கீழே விழுந்தது. பிறகு ஒருபோதும் மறுபடியும் பறக்க முடியவில்லை. பல முறை, தனது இறகுகளைத் தூக்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால் வண்ணத்துப் பூச்சியால் பூமியின் மீது தவழத்தான் முடிந்தது.
வண்ணத்துப் பூச்சியை அதன் கூட்டில் இருந்து வெளியே கொண்டு வர உதவி செய்ததால் பறப்பதற்குத் தேவையான சக்தியை தனது இறக்கைகள் பெறுவதற்கான பலமான உறுதியினை அதற்குக் கிடைக்காமல் அவர் செய்து விட்டதாக விஞ்ஞானி தன் நண்பரிடம் கூறினார். இந்த அழகான உயிரினத்துக்கு உதவி செய்தது அதற்கு அழிவை ஏற்படுத்தும் படியாக அமைந்து விட்டது. இந்த வண்ணத்துப் பூச்சியைப் போலவே மனிதனுடைய அபிவிருத்திக்கு அவசியமான சுயஉதவி ஒரு உன்னத வரம். இந்த சுயஉதவி தான் அவர்களை சிறந்த, உயர்ந்த மனிதனாக்குகிறது.
ஆயிரக்கணக்கான இளைய சமுதாயத்தினரும் இன்று அந்த வண்ணத்துப் பூச்சிக்கு ஏற்பட்ட நிலையைப் போல ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். பெற்றோர்களோ, உற்றார்களோ என்று ஏதோ ஒருவகையில் உதவிகள் பெறப்படுவதால் முயற்சியின் நோக்கம் அறியாதவர்களாகவே வாழ்கிறார்கள்.
பிறந்தது முதல் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் இருப்பதால் எளிதாக வாழ்வை நடத்தி இனிதாக வாழ்ந்து வருகிறார்கள். இது தான் பலரது வாழ்வின் தோல்விக்கு காரணமாக இருக்கின்றது. பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பதால் சுயமுயற்சியின் அவசியம் இளைஞர்களுக்குத் தெரியாமலே போய்விடுகிறது.
நாம் ஒரு இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லும் போது தான் நமது உன்னதமான முயற்சியையும், கடினமான விடா முயற்சியையும் மேற்கொள்கிறோம். இலக்கை எளிதாக எட்டிய போது வரும் பேரின்பத்தைவிட கடினப்பட்டு கிடைக்கும் பொழுதும், அதனால் பிறர் பயனடையும் பொழுதும் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லைகள் இல்லை.
இன்றும் கூட சில இளைஞர்கள் தனது முன்னேற்றத்திற்கு ஊக்குவிக்க யாராவது ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தனது வாழ்வைச் சோம்பலாகக் கழித்து வாழ்வை வீணடிக்கிறார்கள். அதே சமயம், மற்றவர்களால் வரும் பயனை அனுபவித்து காலம் தள்ளுகிறார்கள்.
லட்சியத்துக்கான கதவுகள் கண்ணுக்குப் புலப்படாதது ஏதோ ஒரு விதி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டக் கதவுகளை, தான்தான் திறக்க வேண்டும் என்று எவர் ஒருவர் முயற்சித்து முன்னுக்கு வருகிறார்களோ அவர்களையே சரித்திரங்கள் சித்தரிக்கும்.
தங்களது லட்சியங்களை சிறு சிறு கூறுகளாக வகுத்துக் கொண்டு, இதற்குள் இதை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு பிறர் தயவை நாடாமல் முன்னுக்கு வரும் மனம் வேண்டும்.
அதிர்ஷ்டக் கதவிற்கு யாரும் இலவச நுழைவுச் சீட்டையோ, அனுமதியையோ தரத் தேவையில்லை. இளைஞர்கள் மட்டும் தான் அதற்கான விலையைத் தர வேண்டும். அந்த விலையை அவர்கள் தராவிட்டால் காலம் முழுவதும் வாயிலிலே காத்திருக்க வேண்டியது தான். சுயமுயற்சி என்னும் விலையை மட்டும் தந்தால் அதிர்ஷ்டக் கதவுகள் நிச்சயம் திறக்கும்.
*💗வாழ்க வளமுடன்💗*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment